முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை (12) இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராக உள்ளதாக அவரது ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான மனோஜ் கமகே ஊடகங்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் ஜனாதிபதி காலை 9.00 மணிக்கு முன்னிலையாவார் என கூறினார்.
மேலும், அவருக்கு வழங்கப்பட்டுள்ள அழைப்பாணை தொடர்பான சட்ட விடயங்கள் குறித்து விவாதிக்க, சட்டத்தரணிகள் குழு ஒன்று இன்று பிற்பகல் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக கமகே தெரிவித்தார்.
மறைந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி கபில சந்திரசேன அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு குறித்த அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும், தனது வாக்குமூலம் அச்சுறுத்தல் மற்றும் வற்புறுத்தலின் பேரில் பெறப்பட்டது என்று கூறி சந்திரசேன நீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்திருந்ததைச் சுட்டிக்காட்டிய மனோஜ் கமகே, அத்தகைய சாட்சியத்தின் அடிப்படையில் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டால், அது ஒரு கடுமையான விடயமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த விவகாரம் குறித்த அறிக்கை ஏற்கனவே நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும், சட்டவிரோதமான வாக்குமூலத்தின் அடிப்படையில் அழைப்பாணை தொடர்ந்தால், சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.








