இனவாதத்தைப் பரப்பும் தரப்பினருக்கு எதிராக எதிர்காலங்களில் கடுமையான சட்டங்கள் அமுல்ப்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாட்டிலுள்ள அனைத்து இன மக்களினதும் கலை, கலாசாரங்களையும் கொண்டாடும் வகையில் ஒக்டோபர் மாதத்தில் “தேசிய மஹா மங்கல” நாள் ஒன்றை பிரகடனப்படுத்துவதற்கும் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட விடயங்களைக் கலந்துரையாடும் வகையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அபிவிருத்தி குழுக்கூட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த கூட்டத்தின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக தொழில்கோரும் பட்டதாரிகள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தமக்கான நிரந்தர வேலைவாய்ப்பைப் பெற்றுத்தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன், மக்களின் காணிகள் மக்களுக்கே உரித்தாக வேண்டும் எனவும், வடக்கின் காணிப்பிரச்சினை தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு, வெகு விரைவில் மக்களுக்கு மீண்டும் காணிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதன்போது தெரிவித்துள்ளார்.








