தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் மூத்த போராளிகளில் ஒருவரும் தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளருமான அமரர். ம. க. சிவாஜிலிங்கம் அவர்களின் மறைவுக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.

அரச ஊழியராக பணியாற்றிய வேளையில் தன்னை போராளியாக மாற்றிக்கொண்ட சிவாஜி பத்து வருடங்களாக நாடாளுமன்றத்திலும், ஐந்து வருடங்களாக வடக்கு மாகாணசபையிலும், மரணத்தை அண்மித்த நாட்களில் நகராட்சி மன்றத்திலும் மக்கள் பிரதிநிதியாக செயற்பட்ட காலங்களில் தமிழ் மக்களின் அடிப்படையான உரிமைகள் விடயத்தில் சமரசத்திற்கிடமில்லாத வகையில் மக்களின் எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்துவதிலும், அதற்காக தொடர்ந்து போராடுவதிலும் முன்னிலை வகித்திருந்தார்.

சில சமயங்களில் அவர் மேற்கொண்ட அரசியல் தீர்மானங்களில் எமக்கு உடன்பாடு இருந்திருக்கவில்லையெனினும், அவரது பார்வையில் அந்த தீர்மானங்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை வீரியத்துடன் வெளிப்படுத்தும் போக்காகவே அமைந்திருந்தன என்பதை நாம் எப்போதும் புரிந்துகொண்டிருந்தோம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்திருக்காத தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று நிகழ்வுகளின், நடமாடும் தகவல் களஞ்சியமாக திகழ்ந்த சிவாஜி தான் சார்ந்த அமைப்பு என்ற எல்லையைத் தாண்டி ஏனைய போராட்ட அமைப்புகளுடன் பகிர்ந்து கொண்ட விடயங்கள் ஏராளம்.

ஆயுதப் போராட்ட வரலாற்றில் எந்த ஒரு போராட்ட அமைப்பும் செய்ய நினைத்திராத, சக அமைப்பு ஒன்றுக்கு தங்கள் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய உரிய பொறுப்பை சிறப்பாக நிறைவேற்றியிருந்தார். ஒவ்வொரு வரலாற்றுத் தருணத்திலும் தான் ஆற்ற வேண்டிய கடமைகளை அதற்கான பின்விளைவுகளையும், அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது ஆற்றக்கூடிய உறுதிப்பாடும், துணிவும் கொண்டவர் சிவாஜி என்பதற்கு புலிகள் அமைப்பின் தலைவரின் பெற்றோர் விடயத்தில் அவர்காட்டிய ஈடுபாடு ஒரு சாட்சியாகும்.

வரலாற்றின் நிகழ்வுகள் யாவும் பாரபட்சமற்ற வகையில் அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுவதன் மூலமே நாம் அனைவரும் விழிப்புடன் இருக்க முடியும். அவ்வாறு கடத்தக்கூடிய, விரல் விட்டு எண்ணெக்கூடியவர்களின் தொடர் இழப்புகள் எமது போராட்டத்திற்கு பின்னடைவையே ஏற்படுத்துகின்றன. அந்த வகையிலேயே அமரர் சிவாஜி அவர்களின் மறைவையும் நாம் காண்கிறோம்.

அவரின் பிரிவால் துயருறுகின்ற தோழர்கள், உறவினர்கள், நண்பர்கள் அனைவரினதும் துயரங்களில் நாமும் பங்குகொள்கிறோம் என அவ்வமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here