கல்வி பொதுத்தராதர சாதாரண தர (O/L) மற்றும் உயர் தர (A/L) பரீட்சைகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பாடசாலை வருகை கட்டாயம் என பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.

தங்கள் பிள்ளைகள் தொடர்ந்து பாடசாலைக்கு செல்வதை உறுதி செய்யுமாறு பெற்றோரிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (15) அக்கரைப்பற்று முஸ்லிம் தேசிய பாடசாலையின் 80வது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய பிரதமர், ஒவ்வொரு பிள்ளையும் 13 ஆண்டுகள் கல்வியைப் பெற வேண்டும் என தெரிவித்தார்.

சாதாரண தர  மற்றும் உயர் தர வகுப்புகளை அடையும் போது சில மாணவர்கள் தொடர்ந்து பாடசாலைக்கு வருவதை நிறுத்தி விடுவது குறித்து அவர் கவலை தெரிவித்தார்.

“ஒவ்வொரு பிள்ளையும் பாடசாலைக்கு வர வேண்டும். ஒவ்வொரு பிள்ளையும் 13 ஆண்டுகள் கல்வியைப் பெற வேண்டும். குறிப்பாக பெற்றோர் தங்கள் பிள்ளைகள் பாடசாலைக்கு செல்வதை உறுதி செய்யுமாறு நான் வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று அவர் கூறினார்.

இதேவேளை கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் பிரதமர் எடுத்துரைத்தார். 2027 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்காக 749 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் பாடசாலைக் கல்விக்காக 562.4 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார்.

இந்த ஒதுக்கீடு இலங்கை வரலாற்றில் மிக அதிகமானது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

நடைபெற்று வரும் கல்வி சீர்திருத்தங்கள் குறித்து குறிப்பிட்ட கலாநிதி அமரசூரிய, 2026 ஆம் ஆண்டில் தரம் 1 க்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டம், 2027 ஆம் ஆண்டில் தரம் 2 மற்றும் தரம் 6 ஆகியவற்றுக்கு விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்தார்.

பாடசாலை அமைப்புக்குள் மாணவர்களுக்கு தொழில்நுட்பம், தொழிற்கல்வி மற்றும் நடைமுறை வாழ்க்கை திறன்களுக்கான அதிக அணுகலை வழங்குவதை இந்த சீர்திருத்தங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன என்று அவர் விளக்கினார்.

கல்வி என்பது பரீட்சைகளில் சித்தியடைவதற்கு அப்பால் செல்ல வேண்டும் என்றும், வேகமாக மாறிவரும் உலகில் வெற்றி பெற தேவையான தலைமைத்துவம், குழுப்பணி, நேர்மறையான மனப்பான்மை மற்றும் திறன்களை வளர்த்துக் கொள்ள மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

இலங்கையில் உள்ள ஒவ்வொரு பிள்ளைக்கும் அவர்களின் பின்னணியைப் பொருட்படுத்தாமல் தரமான கல்வியைப் பெற உரிமை உண்டு என்றும், சமமான கல்வி வாய்ப்புகளை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here