
கரூரில் பேரணிக் கூட்ட நெரிசல்: விஜய் காணொளி அழைப்பில் உயிரிழந்த குடும்பங்களுடன் தொடர்பு!
தமிழகத்தின் கரூரில் கடந்த மாதம் நடைபெற்ற பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவருமான விஜய், காணொளி அழைப்புகள் மூலம் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்ளத் தொடங்கியுள்ளார்.
விஜய் இதுவரை 4 முதல் 5 குடும்பங்களுடன் நேரடியாக பேசியுள்ளதாக அவரது அணியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஒவ்வொரு அழைப்பும் சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததாகவும், அதில் விஜய் குடும்பத்தினரிடம் ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்து, அவர்களுக்கு உதவி செய்வதாக உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது.
கரூரில் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததுடன், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் பெண்களும், குழந்தைகளும் அடங்குவர்.
சம்பவத்துக்குப் பின்னர், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்குவதாக விஜய் அறிவித்திருந்தார். தற்போது காணொளி அழைப்புகளின் மூலம் குடும்பங்களை தொடர்பு கொள்கிற அவர், விரைவில் நேரில் சென்று சந்திப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தாலும், பாஜக அல்லது ஆளும் திமுக ஆகியவை இதுவரை விஜயை நேரடியாக விமர்சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சம்பவம் தொடர்பாக சில TVK நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருந்தாலும், விஜயின் பெயர் எந்தவொரு வழக்கிலும் இடம்பெறவில்லை.
போலீஸ் தகவலின்படி, பேரணிக்கு 10,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், சுமார் 30,000 பேர் திரண்டிருந்தனர். 500 போலீசர்கள் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும், விஜயின் வருகை தாமதமானதும் கூட்ட நெரிசலுக்கான முக்கிய காரணமாக அமைந்தது. அவர் நண்பகல் 12 மணிக்கு வருவதாக இருந்த நிலையில், மாலை 7 மணிக்குப் பிறகே நிகழ்விடம் வந்தார்.
அதற்கு முன்பே, கடும் வெயிலில் காலை 9 மணி முதல் ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர். தண்ணீர் மற்றும் உணவு வசதிகள் இல்லாததால் பலர் மயக்கம் அடைந்தனர். இதுவே பலரது உயிரிழப்பிற்குக் காரணமாக அமைந்தது.