கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண் ஒருவர் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவால் (CCIB) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அமெரிக்க டொலர் போன்ற போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் விடப்பட்டதாக கூறப்படும் ஒரு நடவடிக்கை குறித்த விசாரணையைத் தொடர்ந்து, சந்தேக நபரின் இல்லத்தில் இன்று காலை இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கைப்பற்றப்பட்ட போலி நாணயத்தாள்கள்களின் முகமதிப்பு சுமார் 210 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த போலி நாணயத்தாள்கள் வெளிநாட்டில் அச்சிடப்பட்டு இலங்கைக்குள் கடத்தி வரப்பட்டதாகப் புலனாய்வாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையுடன் தொடர்புடைய பாகிஸ்தான் நாட்டவர் ஒருவர் மீது தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் உள்ளூர் வணிகர்களை ஏமாற்றுவதற்காக போலி அமெரிக்க டொலர் தாள்களை பயன்படுத்தியதாகவும், ஒரு அமெரிக்க டொலருக்கு 284 ரூபாய் என்ற விகிதத்தில் அவற்றை மாற்றத் தயாராக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

சந்தேக நபர், நாளை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

போலி அமெரிக்க டொலர் மோசடிக் கும்பலுடன் தொடர்புடைய ஏனைய நபர்களை அடையாளம் காணும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here