இஸ்ரேல் மீதான தாக்குதல்களை தாம் நிறுத்தியுள்ளதாகவும், எவ்வாராயினும் லெபனானுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனவும் ஈரான் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளதாக கூறியுள்ள ஈரான், தெற்கு லெபனான் உட்பட, இஸ்ரேல் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்தால், மீண்டும் மோதல் தொடங்கும் என எச்சரித்துள்ளது.
“லெபனானின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக, ஈரான் இஸ்லாமியக் குடியரசின் சக்திவாய்ந்த ஆயுதப் படைகள் இந்த ஆட்சிக்கு (இஸ்ரேல்) ஒரு வலிமிகுந்த பதிலடியைக் கொடுத்துள்ளன,” என ஈரான் இராணுவம் கூறியுள்ளதாக தஸ்னிம் செய்தி தெரிவித்துள்ளது.
“தெற்கு லெபனான் உட்பட, ஆக்கிரமிப்புகளும் விரோதச் செயல்களும் தொடர்ந்தால், முன்பை விட மிகவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என்றும் அது கூறியுள்ளது.
இதேநேரம் “பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லாவின் கோட்டை மீதான தாக்குதல்களுக்கு பதிலாக, இஸ்ரேல் மக்கள் வசிக்கும் பகுதிகள் மீது தாக்குதல்கள் நடத்தும் ஈரானின் முயற்சியை இஸ்ரேல் ஏற்காது,” என இஸ்ரேலியப் பிரதமர் அலுவலகம் அமைச்சர்களுக்கு அனுப்பிய செய்தியில் கூறியதாக, முன்னதாக ஒரு இஸ்ரேலிய அதிகாரி சி.என்.என்னிடம் தெரிவித்தார்.
“எங்கள் குடிமக்களுக்கு ஹிஸ்புல்லாவின் பயங்கரவாத அச்சுறுத்தலை அகற்றுவதற்காக, தேவைக்கேற்ப லெபனான் முழுவதும் நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம்,” என்று அந்தச் செய்தியில் மேலும் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஈரானின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.








