மேலதிக கட்டணம் விதிக்கப்பட்ட போதிலும், வாகன இறக்குமதிகள் கணிசமாக குறையவில்லை என இலங்கை சுங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஊடகங்களுக்குப் பேட்டியளித்த சுங்கப்பிரிவு செய்தித் தொடர்பாளர் சந்தன புஞ்சிஹேவா, பெருமளவிலான வாகனங்கள் விற்கப்படாமல் காணப்படுகிற போதும், எதிர்பார்த்த அளவு வாகன இறக்குமதிகள் குறையவில்லை என்றும், அரச வருவாயில் எந்தவொரு நிதி தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும் குறிப்பிட்டார்.
சுங்கத்துறையின் வருமானத்தில் வாகன இறக்குமதிகள் சுமார் 30 சதவீதப் பங்களிப்பை அளிக்கின்றன என தெரிவித்த சந்தன புஞ்சிஹேவா அது தொடர்பான விபரத்தை அளித்துள்ளார்.
‘ஜனவரியில், மொத்த வருவாய் ரூ. 235 பில்லியனாக காணப்பட்டது, அதில் ரூ. 91 பில்லியன் வாகனங்கள் மூலம் கிடைத்தது; பெப்ரவரியில், ரூ. 215 பில்லியனாக காணப்பட்டது, அதில் ரூ. 75 பில்லியன் வாகனங்கள் மூலம் கிடைத்தது; மார்ச் மாத வருமானம், ரூ. 231.9 பில்லியனாக காணப்பட்டது, அதில் ரூ. 77 பில்லியன் வாகனங்கள் மூலம் கிடைத்தது.
ஏப்ரல் மாதத்தில் ரூ. 242.9 பில்லியன் வருமானமாக இருந்தது, அதில் ரூ. 84 பில்லியன் வாகனங்கள் மூலம் கிடைத்தது; மற்றும் மே மாதத்தில், மே 28 வரை, ரூ. 212 பில்லியனாக இருந்தது. இதில் வாகனங்கள் மூலம் 76 பில்லியன் கிடைத்தது’ என தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு போர் காரணமாக டொலர் மதிப்பில் ஏற்பட்ட அதிகரிப்பு , சுங்க வரிகளின் ரூபாய் மதிப்பை அதிகரித்துள்ளது, இதன் மூலம் வருமானம் குறைவதற்கு பதிலாக அதிகரித்துள்ளது என சந்தன புஞ்சிஹேவா மேலும் கூறினார்.
கடந்த ஆண்டு சுங்க வருவாயில் 30-35 சதவீதம் வாகன இறக்குமதி மூலம் கிடைத்தது என்றும், இந்த ஆண்டும் இதே போக்கு தொடர்கிறது என்றும் அவர் மேலும் கூறினார்.
“மேலதிக கட்டணம் விதிக்கப்பட்ட போதிலும், எதிர்பார்த்தது போல இறக்குமதியில் பாதிப்பு பதிவாகவில்லை,” என்று அவர் கூறினார்.








