காணாமல் போனதாக தகவல் வெளியான பதுளை வைத்தியசாலை வைத்தியரின் சடலம் மஹியங்கனை மாபகடவெவ பகுதிக்கு அருகில் உள்ள பாறையொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பதுளை போதனா வைத்தியசாலையின் மயக்கவியல் நிபுணரான இவர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்தார். அதன் பின்னர் இவ்வாறு காணாமல் போயிருந்தார் என தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் விசாரணை நடத்தியபோது, வைத்தியரின் மோட்டார் வாகனம் மஹியங்கனை நோக்கி செல்வது மீகஹகிவுல பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) கமராவில் பதிவாகியிருப்பது அவதானிக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளில், வைத்தியரின் மோட்டார் வாகனம் பதுளை – மஹியங்கனை கால்வாய் வீதியின் 17ஆம் கம்பத்திற்கு அருகில், மாபகடவெவ பகுதியில் நேற்று இரவு கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, காணாமல் போன வைத்தியரை தேடி அந்த பகுதியில் இன்று (24) பொலிஸார், குற்றவியல் கள அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து கூட்டு தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர். அதன் போதே அவரது சடலம் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.








