முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர, கொழும்பில் உள்ள தி கிங்ஸ்பரி ஹோட்டலுக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பி இழப்பீடு கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹோட்டலுக்கு அவர் விஜயம் செய்ததைக் காட்டும் சிதைக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியானதாகக் கூறி ரூ. 100 மில்லியன் இழப்பீடு கோரி சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக அச்சுறுத்தியுள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பெரேரா செனவிரத்ன அசோசியேட்ஸ் என்ற தனது சட்டத்தரணிகள் ஊடாக அனுப்பப்பட்ட அக்டோபர் 29 திகதியிடப்பட்ட கடிதத்தில், அக்டோபர் 24 அன்று ஹோட்டலுக்கு விஜயம் செய்தபோது பதிவு செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் சிதைக்கப்பட்டு பல சமூக ஊடக தளங்களில் பரப்பப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடிதத்தின்படி, வீரசேகரவும் ஒரு பௌத்த பிக்குவும் ஒன்றாக அல்லது ஏறக்குறைய ஒரே நேரத்தில் ஹோட்டல் அறைக்குள் நுழைந்ததாக தவறான எண்ணத்தை உருவாக்கும் வகையில் காட்சிகள் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

காட்சிகளால் உருவாக்கப்பட்ட விடயம் தவறானது என அவரது சட்டத்தரணிகள் கூறுகின்றனர்.

தசத லங்கா நியூஸ், சனல் 4, குணே ஐயாகே கமரே மற்றும் சைபர் நியூஸ் LK உள்ளிட்ட பல ஃபேஸ்புக் பக்கங்கள் மற்றும் யூடியூப் (YouTube) சனல்களை இயக்கும் நபர்களுடன் இணைந்து ஹோட்டல் காட்சிகள் அல்லது நிழற்படங்களை வெளியிட்டதாகவும் கடிதத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த ஒரு பேஸ்புக் பக்கம் அவரது செயலாளரை உள்ளடக்கிய தவறான கூற்றுடன் காணொளியை வெளியிட்டதாகவும், அந்த நபரை முன்னாள் தேசிய புலனாய்வுத் தலைவர் ஹெந்தவிதாரண என தவறாக அடையாளம் காட்டியதாகவும் வீரசேகரவின் சட்டத்தரணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

அசல் சிசிடிவி பதிவுகள் ஹோட்டலின் பிரத்தியேக வசம் மற்றும் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும்,  அதன் ஈடுபாடு இல்லாமல் அவற்றை பரப்பியிருக்க முடியாது என்றும் சட்டத்தரணிகள் வாதிடுகின்றனர்.

வீரசேகரவின் அனுமதியின்றி காட்சிகளை வெளியிட்டது அவரது தனியுரிமை மற்றும் ஹோட்டலின் தனியுரிமைக் கொள்கையை மீறுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

காட்சிகள் பரவியதைத் தொடர்ந்து வீரசேகர கடுமையான ஒன்லைன் துன்புறுத்தல், மன உளைச்சல் மற்றும் தனது நற்பெயருக்கு சேதம் ஏற்பட்டதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடிதம் கிடைத்த ஏழு நாட்களுக்குள், காட்சிகளை அணுகிய, மாற்றிய அல்லது வெளியிட்டதற்கு பொறுப்பானவர்களை அடையாளம் கண்டு, அது யாருக்கு வழங்கப்பட்டது என்பதை வெளியிடுமாறு முன்னாள் அமைச்சர் ஹோட்டலுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இணைய தளங்களில் இருந்து காட்சிகளை அகற்றவும், கூறப்படும் சிதைவை ஒப்புக்கொண்டு பகிரங்க தெளிவுபடுத்தல், எழுத்துப்பூர்வ மன்னிப்பு மற்றும் மேலும் அங்கீகரிக்கப்படாத வெளியீடுகளுக்கு எதிராக உறுதிமொழி வழங்கவும் அவர் கோரியுள்ளார்.

இணங்கத் தவறினால் மேலதிக அறிவிப்பின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடிதத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது, அவதூறு, தனியுரிமை மீறல், நற்பெயருக்கு சேதம் மற்றும் மன உளைச்சல் ஆகியவற்றுக்காக ரூ. 100 மில்லியன் இழப்பீடு கோரும் உரிமையை வீரசேகர கொண்டுள்ளார்.

பொலிஸ், இணைய பாதுகாப்பு ஆணைக்குழு மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்படலாம் என்றும் அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here