கிழக்கு மாகாண நன்னீர் மீன்வளத்திற்காக, ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) தொழிநுட்ப அனுசரணை மற்றும் ஜப்பானின் 1.33 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுடன் (சுமார் 436 மில்லியன் ரூபாய்) அபிவிருத்தி திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளன.
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவ சமூகங்கள் மீண்டு வருவதை உறுதிப்படுத்துதல் மீன் உற்பத்தியை அதிகரித்தல் ஆகிய முக்கிய நோக்கங்களுடன் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய,மீன் கூண்டுகள் தொழிநுட்பத்தை பயன்படுத்தும் வகையில் 30 நீர்த்தேக்கங்களில் 200 மீன் கூண்டுகள் அமைத்தல், மீன்பிடிப்பதற்கான தடுப்பணை வலை அமைப்புகள், இங்கினியகல மீன் இனப்பெருக்க மையத்தை மேம்படுத்துதல், முதல் சுற்றுக்கு இலவச மீன் குஞ்சுகள் + தீவனம் வழங்குதல், மீன்பிடி சங்கங்களுக்கான பயிற்சித் திட்டங்கள் ஆகியன மேற்கொள்ளப்படவுள்ளன.
நன்னீர் மீன்பிடியை நவீனமயமாக்குவதற்கும் மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் இந்த திட்டம் ஒரு மைல்கல்லாக அமையும் என மீன்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை எரிபொருள் விலை அதிகரிப்பால் கடலில் மீன்பிடிப்பதற்கான செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், உணவுப் பாதுகாப்பிற்கு நன்னீர் மீன்பிடி மிக அவசியமானது என ஜப்பானிய தூதர் அகியோ இசொமட்ட குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் வளர்ச்சிக்கு மேலும் உறுதுணையாக இருப்பதாக ஜப்பான் உறுதியளித்துள்ளது.
கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகத்தில் நேற்று முன்தினம் (29) அன்று இந்த ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








