கொழும்பு மாவட்டத்தின் கெஸ்பேவ பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 08.30 மணி முதல் இன்று (13) காலை 06.30 மணி வரையிலான காலப்பகுதியில், 204 மி.மீ மழை பதிவாகியுள்ள நிலையில், இது நேற்றைய தினத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை , கம்பஹா மாவட்டத்தின் வெயங்கொடவில் 145.5 மி.மீ மழையும், இரத்தினபுர மாவட்டத்தின் கிலிமலையில் 121.0 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் உள்ள வத்துப்பிட்டிவல (105.50), காலி மாவட்டத்தில் உள்ள தெவிதுர தோட்ட பகுதியில் (102.5), களுத்துறை மாவட்டத்தில் உள்ள பண்டாரகம அரசாங்கப் பண்ணை பகுதியில் (102.5) மற்றும் களுத்துறை மாவட்டத்தில் உள்ள ஹொரன (101.5) ஆகிய இடங்களிலும் 100 மி.மீ-க்கு மேல் மழை பதிவாகியுள்ளது.

இதேநேரம் மேற்கு, சபரகமுவ, வடமேற்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, காலி, மாத்தறை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கமைய, பிற்பகல் 03.30 மணி வரை, 17 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 08 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் அருகாமையில் நிலவும் குறைந்த காற்றழுத்தப் பகுதி காரணமாக, தற்போது நிலவும் மழைப்பொழிவு நிலை மேலும் தொடரும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களின் சில இடங்களில் 200 மி.மீ-க்கும் அதிகமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அத்துடன் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும், திருகோணமலை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சுமார் 100 மி.மீ. அளவுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here