புத்தளம் உச்சமுனை தீவுப் பகுதியில், சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை கிருமிநாசினிகளுடன் இரு சந்தேகநபர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
குறித்த தீவுப் பகுதியில், சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிங்கி ரக இயந்திரப் படகொன்றினை சோதனைக்குட்படுத்திய வடமேற்கு கடற்படை கட்டளையின் விஜய கடற்படையினர், 11 உரமூடைகளில் சூட்சுமமாக அடைக்கப்பட்டிருந்த நிலையில் காணப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான கிருமி நாசினிகளை கண்டுபிடித்துள்ளனர்.
அத்துடன், குறித்த டிங்கி இயந்திர படகில் இருந்த இருவரையும் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த கிருமி நாசினிகள் சட்டவிரோதமான முறையில் வெளிநாடொன்றிலிருந்து கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள கடற்படையினர், கைப்பற்றப்பட்ட கிருமி நாசினிகளுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.








