சட்ட வரைவு செயல்முறையில் செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்துவது குறித்த சிறப்பு பயிலரங்கை இலங்கை நடத்தியுள்ளது. மெய்நிகர் சொத்து சேவை வழங்குநர்கள் (VASPs) தொடர்பான சட்டத்தை வரைவதில் இந்த தொழில்நுட்பத்தை பரிசோதனை அடிப்படையில் பயன்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.
“சிறந்த சட்டங்களுக்கான சிறந்த கருவிகள்” என்ற தொனிப்பொருளில் ஒகஸ்ட் 21 அன்று சட்ட வரைவாளர் திணைக்களத்தில் இந்த பயிலரங்கு நடைபெற்றது. இதனை டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அனுசரணையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தலைமையில் இடம்பெற்ற இந்த அமர்வில், நாட்டின் சட்ட வரைவு செயல்முறையில் AI ஐ ஒருங்கிணைப்பதற்காக முன்மொழியப்பட்ட செயல் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.
முதல் கட்டமாக, முன்மொழியப்பட்ட மெய்நிகர் சொத்து சேவை வழங்குநர்கள் பிரேரணை தொடர்பான பணிகளுக்கு AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த அதிகாரிகள் முன்மொழிந்துள்ளனர்.
இந்த பயிலரங்கில் சட்ட வரைவு, சரிபார்ப்பு மற்றும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஆவணங்களை தயாரிப்பதற்கான AI உதவி கருவிகளின் நடைமுறை பயன்பாடும் நிரூபிக்கப்பட்டது.
தரவு தயார்நிலை, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பரிசோதனை திட்டத்தை முன்னெடுத்து செல்வதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
ஜனாதிபதியின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான சிரேஷ்ட ஆலோசகர் டொக்டர் ஹன்ஸ் விஜயசூரிய, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால, சட்ட வரைவாளர் தில்ருக்ஷி சமரவீர மற்றும் பிற சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.








