பனாமா கொடி பறக்கும் சரக்கு கப்பல் ஒன்று 24 பணியாளர்களுடன் வங்காள விரிகுடாவில் மூழ்கியுள்ளது. காணாமல் போனவர்களை தேடும் மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஒடிசா மாநிலம் பரதீப் கடற்கரையில் இருந்து சுமார் 240 கடல் மைல் தொலைவில் நேற்று `MV ஓசியன் வின்னர் Ocean Winner` ‘கப்பல் மூழ்கியது’. கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தனித்தனி உயிர்காக்கும் படகுகளில் இருந்து 2 பணியாளர்கள் மீட்கப்பட்டனர். கப்பலில் இருந்த மீதமுள்ள 22 பேரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
குறித்த கப்பலில் 20 சீனர்கள், 3 மியான்மார் நாட்டினர் மற்றும் 1 வங்கதேசத்தவர் இருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடலோர காவல்படையும் இந்திய கடற்படையும் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைக்காக கப்பல்களை அனுப்பியுள்ளன. அந்த பகுதியில் உள்ள ஏனைய கப்பல்களுக்கும் உதவுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
ஓசியன் வின்னர் `Ocean Winner` கப்பல் ஒகஸ்ட் 20 அன்று பரதீப் துறைமுகத்தில் இருந்து இரும்புத்தாதுவுடன் சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டது. இதன்போதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
கப்பல் மூழ்கியதற்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.






