அம்பாறை மாவட்டத்தில் உள்ள விகாரை ஒன்றில் 11 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக பௌத்த பிக்கு ஒருவருக்கு விதிக்கப்பட்ட 14 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
நீதிபதிகள் பி. குமாரரத்னம் மற்றும் ஆர்.பி. ஹெட்டியாராச்சி ஆகியோரால் நவம்பர் 17 ஆம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பில், தனது தண்டனை மற்றும் தீர்ப்புக்கு எதிராக எத்பிட்டியே சந்திரானந்த பிக்கு தாக்கல் செய்த மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.
நீதிமன்ற ஆவணங்களின்படி, பாதிக்கப்பட்ட சிறுவன் தனது பெற்றோருடன் சிவ்மினிசெய விகாரைக்கு சென்றிருந்த போது, பிரதம குரு சிறுவர்களை பௌத்த துறவறத்தில் சேர அழைத்துள்ளார்.அதனைத் தொடர்ந்து சிறுவன் சிறு துறவியாகி விகாரையில் தங்கியிருந்த போது, 2014 ஆம் ஆண்டில் சுமார் 10 மாதங்களுக்கு மீண்டும் மீண்டும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளான்.
விகாரையில் கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
விசாரணையின் போது, சாட்சியம் அளித்த போது 19 வயதாக இருந்த பாதிக்கப்பட்டவர், பிக்குவின் பாதுகாப்பில் இருந்த போது தான் அனுபவித்த துஷ்பிரயோகம் குறித்து விபரித்தார்.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ சான்றுகளும் அரசு தரப்பு வழக்கை உறுதிப்படுத்தின.
அம்பாறை மேல் நீதிமன்றம் பிக்குவை கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் என்ற ஒரு குற்றச்சாட்டில் குற்றவாளி என தீர்ப்பளித்து 14 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்தது.
அத்துடன் ரூ. 40,000 அபராதமும், பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 500,000 நஷ்டஈடும் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டது.
அரசு தரப்பு வழக்கை நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்க தவறிவிட்டமை, பாதுகாப்பு தரப்பு சான்றுகள் முறையாக பரிசீலிக்கப்படவில்லை மற்றும் தண்டனை அதிகமானமை என வாதிட்டு பிக்கு மேல்முறையீடு செய்திருந்தார்.
எனினும் விசாரணை நீதிபதி சான்றுகளை முறையாக மதிப்பீடு செய்துள்ளார் என கண்டறிந்து மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த வாதங்களை நிராகரித்தது.
குறித்த பிக்கு, குழந்தை மீது நம்பிக்கை மற்றும் அதிகாரம் கொண்ட பதவியில் இருந்ததாகவும், அந்த பதவியை துஷ்பிரயோகம் செய்ததாகவும் நீதிமன்றம் அவதானித்தது.
பாதிக்கப்பட்டவர் பெரிய முரண்பாடுகள் இன்றி உறுதியான சாட்சியம் அளித்ததாகவும் அது குறிப்பிட்டது.
இதற்கமைய, நீதிமன்றம் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து 14 ஆண்டு சிறைத்தண்டனையை உறுதி செய்ததுடன், மேல் நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட 2026 ஜனவரி 16 ஆம் திகதியில் இருந்து தண்டனை கணக்கிடப்பட வேண்டும் என உத்தரவிட்டது.







