உணவுப் பழக்க வழக்கங்கள் நம் ஆரோக்கியத்தில் அது சார்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே தான் நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்களும், உணவியல் துறை நிபுணர்களும் அடிக்கடி அறிவுறுத்தி வருகின்றனர். நீங்கள் தொடர்ந்து தினமும் இறைச்சி சாப்பிடுபவரா, அதிலும் குறிப்பாக சிவப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை விரும்பி சாப்பிடுபவர் என்றால் இந்தத் தொகுப்பு உங்களுக்கானது தான். சிவப்பு இறைச்சியை விரும்பி சாப்பிடுவது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஒரு புதிய ஆய்வில், பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் பதப்படுத்தப்படாத சிவப்பு இறைச்சிக்கும், டைப் 2 நீரிழிவு நோய்க்கும் இடையேயான தொடர்பு கண்டறியப்பட்டுள்ளது. தி லான்செட் நீரிழிவு மற்றும் எண்டோ கிரைனாலஜி ஜர்னலில் வெளியிடப்பட்ட பகுப்பாய்வின்படி, உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுமார் 2 மில்லியன் பெரியவர்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், இறைச்சிக்கும், நீரிழிவு அபாயத்திற்கும் இடையிலான தொடர்பை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வில், தென்கிழக்கு ஆசியா, ஐரோப்பா, மேற்கு பசிபிக், அமெரிக்கா மற்றும் கிழக்கு மத்திய தரைக் கடல் பகுதிகளைச் சேர்ந்த மக்களின் தரவுகளை ஆய்வு செய்தனர். கண்டுபிடிப்புகளின்படி, ஒவ்வொரு நாளும் 50 கிராம் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உட்கொள்வது அடுத்த 10 ஆண்டுகளில் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்பை 15 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேபோல் சிவப்பு இறைச்சியை ஒரு நாளைக்கு 100 கிராம் எடுத்துக் கொண்டால் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்பு 10 சதவீதம் அதிகரிக்கும் என தெரிய வந்துள்ளது. 2023-ம் ஆண்டில், அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் சிவப்பு இறைச்சி உட்கொள்ளலுக்கும், நீரிழிவு நோய்க்கும் இடையேயான தொடர்பு கண்டறியப்பட்டது. ஒவ்வொரு வாரமும் இரண்டு முறை சிவப்பு இறைச்சியை உட்கொள்வது டைப் 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிப்பதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.








