நுகர்வோர் மற்றும் விவசாயிகள் இருவருக்கும் ஒரே நேரத்தில் சுமையை ஏற்படுத்தும் கொள்கைகளை அரசாங்கம் பின்பற்றுவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குற்றம் சாட்டியுள்ளார்.

அரசாங்கத்தின் சில செயற்பாடுகள் இலங்கையின் ஏழை மக்களையே அதிகம் பாதிப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.

‘X’ தளத்தில் வெளியிட்ட பதிவொன்றில், நாடாளுமன்ற உறுப்பினர் டி சில்வா சமீபத்திய இரண்டு முடிவுகளைச் சுட்டிக்காட்டினார்,

சோள இறக்குமதி மீதான வரிகளை அரசாங்கம் அதிகரித்தமையினால் கோழி மற்றும் முட்டை விலைகளும் அதிகரித்துள்ளன, இது ஏற்கனவே புரதசத்து இன்றி போராடும் குடும்பங்களை பெரிதும் பாதிக்கிறது என தெரிவித்துள்ளார்.

அத்துடன்,150,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டமையினால், நெல் பயிரிடும் விவசாயிகள் தங்கள் அறுவடையை நியாயமான விலையில் விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் “பொது நிதிக்கான நாடாளுமன்றக் குழுவின் (COPF) சமீபத்திய அமர்வில் இது தொடர்பான பிரச்சினை இருப்பதை விவசாய அமைச்சு ஒப்புக்கொண்டது,” என்றும் டி சில்வா குறிப்பிட்டார்.

மேலும், சந்தையில் தலையிடுவதற்கான நெல் சந்தைப்படுத்தல் சபையின் திறன் ஆண்டுக்கு மூன்று அல்லது நான்கு தடவைகளுக்கு மாத்திரமே வரையறுக்கப்பட்டுள்ளமையை அவர் குறித்த பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரிசி சந்தையை கட்டுப்படுத்தும் ஆதிக்க சக்திகளை உடைக்கவும், சிறு ஆலை உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கவும் நிறுவப்பட்ட அரிசி கூட்டுறவு நிறுவனம், எந்தவொரு மாற்று ஏற்பாடும் இன்றி 2020-ல் மூடப்பட்டதையும் அவர் விமர்சித்தார்.

“குறித்த கூட்டுறவு அமைப்பை மீண்டும் தொடங்குமாறும் ஏழைகளை இருபுறமும் தண்டிக்கும் கொள்கையை நிறுத்துமாறும் “டி சில்வா தெரிவித்துள்ளோடு,நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர்கள் இருவரையும் பாதுகாக்க அவசர சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here