தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான மீள்குடியேற்றம் மற்றும் மீள்கட்டமைப்புக்கு வழங்கப்பட்ட நிதியில் 30% மாத்திரமே இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்ததை அடுத்து, பாதுகாப்பு அமைச்சு மாவட்ட செயலாளர்களுக்கு நிவாரண ஒதுக்கீடுகளை விரைவாக வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.
அரசுக்குச் சொந்தமான சிலுமின இதழுக்கமைய, திறைசேரி அறிக்கைகள் பின்வருவனவற்றைக் வெளிப்படுத்தியுள்ளன.
2026 ஜனவரி முதல் ஜூலை வரை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இழப்பீடு மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் ரூ. 86.7 பில்லியன் விடுவித்துள்ளது.
இதில் ரூபாய் 26.4 பில்லியன், அதாவது 30%மாத்திரமே செலவிடப்பட்டுள்ளது. 60.3 பில்லியன், அதாவது 70% இன்னும் பயன்படுத்தப்படாமல் உள்ளது.
இது தொடர்பில் ஒகஸ்ட் 12 திகதியிடப்பட்ட கடிதத்தில், அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மேலதிக செயலாளர், எஞ்சிய 70% நிதியையும் உடனடியாக பயனாளிகளுக்கு வழங்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை பாதிக்கப்பட்ட குடும்பங்களை இடமாற்றம் செய்வதற்கு ஒதுக்கப்பட்ட ரூ. 1.05 பில்லியனில், ஜூலை 31 வரை ரூ. 190 மில்லியன், அதாவது 18% மாத்திரமே செலவிடப்பட்டுள்ளது.ரூ. 868 மில்லியன், அதாவது 82% இன்னும் பயன்படுத்தப்படவில்லை.
மீள்குடியேற்ற திட்டங்கள் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தியை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் ரூ. 1.94 பில்லியன் மேலதிக ஒதுக்கீடு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், அவசர நிவாரண நடவடிக்கைகளில் சிறந்த முன்னேற்றம் உள்ளது.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான அவசர உதவிக்காக விடுவிக்கப்பட்ட ரூ. 7.6 பில்லியனில் 85% ஜூலை 31க்குள் பயனாளிகளை சென்றடைந்துள்ளது.
தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதற்கும், உட்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் நிதியை சரியான நேரத்தில் வழங்குவது அவசியம் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.








