இந்தோனேசியாவின் புளோரஸ் தீவு கடற்கரையில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்த அதிர்வுகளை அடுத்து, இலங்கை தனது ஒத்துழைப்பை வெளியிட்டுள்ளதோடு துயரத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளது.

இந்த அனர்த்தத்தினால் குறைந்தது 51 பேர் உயிரிழந்துள்ளனர்.100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கானோர்  இடம்பெயர்ந்துள்ளனர்.

பாரிய நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து 235க்கும் மேற்பட்ட அதிர்வுகள் பதிவாகியுள்ளன.

நிலநடுக்கத்தை அடுத்து தற்காலிக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் விலக்கப்பட்டது.

நிலச்சரிவுகள், சாலைகள் தடைப்படுதல் மற்றும் தொடர்பு வலையமைப்புகள் செயலிழப்பு ஆகியவற்றுக்கு மத்தியில் மீட்பு பணிகள் தொடர்கின்றன.

தற்போது சுமார் 5,000 பேர் தற்காலிக முகாம்களில் பாதிக்கப்பட்டோர் தங்கியுள்ளனர். நிவாரண குழுக்கள் அத்தியாவசிய பொருட்களை வழங்குவதோடு, மின்சாரம் மற்றும் தொடர்பு சேவைகளை மீட்டெடுக்கும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில் இலங்கை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் இந்தோனேசிய அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

X தளத்தில் பதிவிட்ட அவர், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபங்களையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

காணாமல் போனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் குறித்து தான் கவலை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தோனேசிய அதிகாரிகள், மீட்புக் குழுக்கள், மனிதாபிமான பணியாளர்கள் மற்றும் தேடுதல், மீட்பு, நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள அனைவரின் முயற்சிகளையும் அமைச்சர் பாராட்டினார்.

“கடினமான இந்த நேரத்தில் இலங்கை இந்தோனேசியாவுடன் ஒருமைப்பாட்டுடன் நிற்கிறது” என்றும் அவர் கூறியுள்ளார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here