பயங்கரவாதிகளால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை தடுப்பதற்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகரை நியமிக்குமாறு தற்போதைய அரசாங்கத்திற்கு முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரத்நாயக்க, ஏனைய நாடுகளுடன் புலனாய்வுப் பகிர்வு வலையமைப்பை அறிமுகப்படுத்தியமை முன்னாள் அரசாங்கத்திற்கு இவ்வாறான அச்சுறுத்தல்களைத் தவிர்க்க உதவியதாகக் கூறினார்.
“இந்த வலையமைப்பு மூலம் முக்கியமான தகவல்கள் பரிமாறப்பட்டன, இது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எங்களுக்கு உதவியது. சாத்தியமான அச்சுறுத்தல்கள் குறித்து தகவல் கிடைத்ததும், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்தோம். இதன் விளைவாக, அண்மைய ஆண்டுகளில் இலங்கை பாரிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவில்லை” என்று அவர் வெளிப்படுத்தினார்.
அரசாங்கம் அவ்வாறான தேவையான நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இந்த அச்சுறுத்தல்கள் வெளிவருவதை தடுத்திருக்க முடியும் என சாகல ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.
வளர்ந்து வரும் சுற்றுலாத் துறையிலும் நாட்டிலும் இத்தகைய அச்சுறுத்தல்களின் எதிர்மறையான தாக்கத்தை எடுத்துக்காட்டிய அவர், இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இவ்வாறான எச்சரிக்கைகள் சுற்றுலாத்துறையை பாதிப்பது மட்டுமன்றி பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும் எனவும் இலங்கையின் அந்நிய செலாவணியை நேரடியாக பாதிக்கும் எனவும் தொழில் வாய்ப்புக்கள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படும் எனவும் சாகல ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.
அறுகம் குடா பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக, இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அண்மையில் வெளியிட்ட பயண ஆலோசனை குறித்து கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி ஆலோசகர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.








