தேவையான அனுமதிப் பத்திரங்கள் இன்றி செயல்படும் 24 சட்டவிரோத சூதாட்ட இணையத்தளங்களுக்கான அணுகலை இலங்கை முடக்கியுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவால் – TRCSL மேற்கொள்ளப்பட்டது.
அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கும் குறித்த இணையத்தளங்களுக்கான அணுகலை உடனடியாக முடக்குமாறு அது பணிப்புரை விடுத்துள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயல்படும் சூதாட்ட ஒழுங்குபடுத்தும் அதிகார சபையின் கோரிக்கையைத் தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சூதாட்ட ஒழுங்குபடுத்தும் அதிகார சபை சட்டத்தின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சின் கூற்றுப்படி, சட்டத்தின் 15, 16 மற்றும் 18 ஆம் பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் அனுமதிப் பத்திரம் இன்றி இலங்கையில் இணையதள சூதாட்ட சேவைகளை இயக்குவது அல்லது விளம்பரப்படுத்துவது சட்டத்தின் 44 ஆம் பிரிவின் கீழ் ஒரு குற்றமாகும்.
இதற்கமைய முடக்கப்பட்ட இணையத்தளங்களாவன, 1xbet.com ,betway.com/en-lk, 22bet.com,melbet.com ,unibet.com, betfair.com, dafabet.com, bet365.com, 1win.com, Spinbetter.com, 10cric.com, bc.game,megapari.com, pin-up.bet, stake.com, mostbet.com, parimatch.com, betwinner.com, linebet.com, 4rabet.com, rajabets.com, dbbet.com, coldbet.com, WinWin ஆகியனவாகும்.
இலங்கையின் சட்ட கட்டமைப்பிற்கு வெளியில் இயங்கும் அங்கீகரிக்கப்படாத இணையதள சூதாட்ட தளங்களை பொதுமக்கள் பயன்படுத்தவோ அல்லது பணத்தை முதலீடு செய்யவோ வேண்டாம் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.








