கடுவலை மத்திய பேருந்து நிலையத்தில் இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற சந்தேகத்திற்கிடமான தீ வைப்பு தாக்குதலின் CCTV காட்சிகள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன.
குறித்த காட்சிகளில், முகமூடி அணிந்த இருவர் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வழியாக செல்லும் கடுவலை – மாத்தறை சொகுசு பேருந்தை நோக்கி சென்று தீ வைத்துவிட்டு அமைதியாக நடந்து செல்வது பதிவாகியுள்ளது.
சம்பவம் அதிகாலை 2.30 – 2.45 மணிக்கு இடையில் வாராந்த சந்தை மைதானத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
தீயினால் சொகுசு பேருந்து முற்றாக எறிந்துள்ளதோடு, அருகில் நிறுத்தப்பட்டிருந்த கடுவலை – கொள்ளுபிட்டி சேவை பேருந்துகள் 2-க்கும் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தாக்கப்பட்ட பேருந்தின் சாரதியும் நடத்துநரும் உள்ளே உறங்கிக்கொண்டிருந்த போதும் அருகில் இருந்த மற்றொரு பேருந்தின் சாரதியும் நடத்துநரும் சந்தேக நபர்கள் தொடர்பில் எச்சரித்த நிலையில் அவர்கள் எந்த காயமும் இன்றி தப்பித்துள்ளனர் என அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவிக்கையில், இந்த தாக்குதல் தனிப்பட்ட தகராறு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக கூறியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கடுவலை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







