கலகொட அத்தே ஞானசார தேரர் விடுதலை கோரி கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் போராட்டத்தைத் தொடரும் பலாங்கொட கஸ்ஸப தேரர், சிறையில் உள்ள பிக்குவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கடும் மழைக்கு மத்தியிலும் தொடரும் சத்தியாகிரகத்தின் போது பேசிய கஸ்ஸப தேரர், அக்டோபர் 21 அன்று ஆயுதங்களை ஏந்திய இரண்டு நபர்கள் போராட்ட இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
“நேற்று ஆயுதம் ஏந்திய இரண்டு நபர்கள் இங்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் எங்களுக்குப் பின்னால் நின்று ஆபாசமான வார்த்தைகளால் திட்டினார்கள்,” என தேரர் கூறியுள்ளார்.
“ஜனாதிபதிக்கு இரண்டு வழிகள் மாத்திரமே உள்ளன: பதவியில் இருந்து விலக வேண்டும் அல்லது ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும்,” என கஸ்ஸப தேரர் அறிவித்துள்ளார்.
“நாம் அரசாங்கத்திற்கு சிவப்பு எச்சரிக்கை சமிக்ஞையை அனுப்புகிறோம். வரும் நாட்களில், நாங்கள் பெருமளவிலான பௌத்த துறவிகளை கொழும்புக்கு கொண்டு வருவோம். அது நடப்பதற்கு முன், அரசாங்கம் ஒரு அடி பின்வாங்கி ஞானசார தேரருக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு வழங்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்,” என்றார்.
“அது நடக்கவில்லை என்றால், ஜனாதிபதி தனது ஜனாதிபதி பதவியை இழக்க நேரிடும்,” என கஸ்ஸப தேரர் எச்சரித்தார்.
ஞானசார தேரர் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டதை தொடர்ந்து சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில் போராடும் பிக்குகள் ஞானசார தேரரை விடுதலை செய்ய ஜனாதிபதி மன்னிப்பு கோருகின்றனர்.







