அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தரம் 1 மற்றும் தரம் 6 பாடத்திட்டச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டல் தொகுப்பை கல்வி அமைச்சு நேற்று (23) வெளியிட்டுள்ளது.
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான சுற்றறிக்கைகள் மற்றும் கூடுதல் வழிகாட்டல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
அரசாங்கம் 2026 ஆம் ஆண்டுக்குள் முழுமையான கல்விச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
புதிய பாடத்திட்டத்தின் கீழ் ஆரம்பக் கல்வி மூன்று பிரதான கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது:
முதல் கட்டம்: தரம் 1 மற்றும் 2
இரண்டாம் கட்டம்: தரம் 3 மற்றும் 4
மூன்றாம் கட்டம்: தரம் 5
தரம் 1 முதல் 5 வரையிலான பாடத்திட்டம் 9 பொது கற்றல் துறைகளின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ளது:
தாய்மொழி
ஆங்கில மொழி
இரண்டாம் தேசிய மொழி
கணிதம்
சமயமும் விழுமியக் கல்வியும்
ஆரம்ப விஞ்ஞானம் மற்றும் சூழல் சார்ந்த நடவடிக்கைகள்
ஒருங்கிணைந்த அழகியற் கல்வி
சுகாதாரமும் உடற் கல்வியும்
பாட இணைச் செயற்பாடுகள்
தரம் 1–4 பாடசாலை நேரங்களில் மாற்றம் ஏதுமில்லை. ஆனால், தரம் 5 மாணவர்களுக்கு காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை பாடசாலை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தரம் 1 மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக செயற்பாட்டு புத்தகங்கள் (Activity Books) வழங்கப்பட உள்ளது. இவை தேசிய கல்வி நிறுவனம் வடிவமைத்த புதிய பாடத்திட்டத்திற்கேற்ப தயாரிக்கப்படும்.
அடுத்த ஆண்டு முதல் தரம் 6 இற்காக புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இளையோர் இடைநிலைக் கல்வி கட்டத்தில் உள்ள மாணவர்கள் 14 கட்டாயப் பாடங்களை கற்க வேண்டும். அதோடு, விளையாட்டுகள் மற்றும் சங்கச் செயற்பாடுகளில் பங்கேற்பதற்கும் ஒவ்வொரு மாணவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.
பாடங்கள் அனைத்தும் மட்டுக்கள் (Modules) மூலமாக கற்பிக்கப்படும். ஒவ்வொரு தவணையிலும் கற்பிக்க வேண்டிய மட்டுக்களின் எண்ணிக்கை, பாடத்திற்கேற்ப தீர்மானிக்கப்படும்.
புதிய பாடங்களில் மூன்றும்:
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம்
வாழ்க்கைக்கான தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவு
நிதிசார் கல்வியறிவு
இளையோர் இடைநிலைக் கல்விக்கான பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை, மொத்தம் 50 நிமிடங்கள் கொண்ட 7 காலப்பகுதிகள் உட்பட அமையும்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்ததாவது,
2027 ஆம் ஆண்டு முதல் முன்பள்ளிகளுக்காக ஒரே பாடத்திட்டக் கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ஆரம்பகால குழந்தைப் பருவத்திற்கான பாடத்திட்டக் கட்டமைப்பு தற்போது பூர்த்தியாகியுள்ளதுடன், 19,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சியாளர்களின் பயிற்சி திட்டம் வரும் நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
அத்துடன், எந்தவொரு பாடசாலையும் மூடப்படாது என்றும், பாடசாலைகளை ஒன்றிணைத்து அபிவிருத்தி செய்வதே அரசாங்கத்தின் கொள்கை என்றும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.








