யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் மாணவிகளிடம் முறையற்ற நடத்தையில் ஈடுபட்ட இரண்டு ஆசிரியர்கள் மற்றும் அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காத அதிபர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பில் யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளரிடம் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் கடிதம் மூலம் முறைப்பாடு அளித்துள்ளனர்.

பாடசாலையில் கல்வி கற்பிக்கும் இரண்டு ஆசிரியர்கள், பெண்பிள்ளைகளை பாடசாலையின் தனிப்பட்ட அறைக்கு அழைத்துச் சென்று விசாரிப்பது, முறையற்ற தொடுகைகளில்   ஈடுபட்டது என பெற்றோர்கள் முறைப்பாட்டுக் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

மேலும், அந்த முறைப்பாட்டுக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

இந்த பிள்ளைகள் பாரிய மன உளைச்சலை சந்தித்திருப்பதுடன் பாடசாலைக்குச் செல்ல மறுக்கின்றனர்.

இச்சம்பவத்தினை பாடசாலை பழைய மாணவர் சங்க செயலாளருக்கு தெரியப்படுத்தி அவரையும் பாடசாலைக்கு அழைத்துச் சென்று அதிபருக்கு தெரியப்படுத்தினோம்.

அன்றைய தினம் ஆசிரியர் ஒருவரினால் றீப்பை தடியினால் அந்தப் பிள்ளைகள் தாக்கப்பட்டு, அதனால் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இவ்வளவு சம்பவங்கள் நடைபெற்றபோதும் அதிபரினால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அதிபரும் இணைந்து இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். ஆகவே, இவர்களை இடைநிறுத்தி விசாரணை மேற்கொண்டு உரிய தண்டனைகளை வழங்குவதுடன் இடமாற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இவற்றை தாங்கள் செய்வதன் மூலம் எமது பிள்ளைகள் அச்சமின்றி பாடசாலைக்கு சமுகமளிக்க முடியும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றோம் என்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோரால் பொலிஸார், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு என்பனவற்றிலும் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here