மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிராக, மேல் மாகாண சபையின் கீழ் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் பணிபுரியும் நிறைவுகாண் வைத்திய சேவை தொழில் வல்லுநர்கள் இன்று (21) காலை 8 மணி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இது குறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்ததாவது,
கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையின் தொழில் வல்லுநர்கள் நேற்று (20) அடையாள வேலைநிறுத்தம் மேற்கொண்ட போதிலும், அதிகாரிகளிடமிருந்து எந்தவித தீர்வும் கிடைக்காததால், இன்று முதல் மேல் மாகாண சபையின் கீழ் உள்ள 31 வைத்தியசாலைகளிலும் வேலைநிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதேவேளை, தபால் தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கிறது. 19 கோரிக்கைகளை முன்வைத்து, அவர்கள் கடந்த 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் நாட்டின் அனைத்து தபால் அலுவலகங்களிலும் வேலைநிறுத்தத்தை ஆரம்பித்திருந்தனர்.
வேலைநிறுத்தம் காரணமாக தபால் மூலம் சேவைகளைப் பெற வந்த பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், தங்கள் கோரிக்கைகள் குறித்து கலந்துரையாட நிர்வாகம் நேற்று (20) வாய்ப்பு வழங்காததால், இன்று மீண்டும் வேலைநிறுத்தத்தை தொடர்வதாக தொழிற்சங்கங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.








