சுற்றுலா பொலிஸ் அதிகாரிகள் போல நடித்து பிரேசில் நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரை தடுத்து வைத்து 30 லட்சம் ரூபாய் பெற முயன்ற குற்றச்சாட்டில் 3 பேரை உனவட்டுனை சுற்றுலா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் குறித்து தெரிய வருவதாவது,
காலி, தல்பே பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த பிரேசில் நாட்டவர் அறைக்குள் சுற்றுலா பொலிஸ் எனத் தெரிவித்து 2 சந்தேகநபர்கள் சென்றுள்ளனர். அவர்கள் அறையை சோதனையிட்டு, பிரேசில் கடவுச்சீட்டு, அமெரிக்க ஆவணங்கள், செல்போன்கள் உள்ளிட்ட பல பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.
இதன்பின் 3-வது சந்தேகநபரும் அங்கு வந்து, கைவிலங்கிட்ட நிலையில் அச்சுறுத்தியுள்ளனர்.
இதனை அடுத்து கொழும்பில் உள்ள சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிக்கு இலஞ்சம் கொடுத்தால் மாத்திரமே கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிக்க முடியும் என கூறி 30 லட்சம் ரூபாய் கோரியுள்ளனர்.
இதில் ஏற்கனவே மோட்டார் சைக்கிளை அடகு வைத்து 2 லட்சம் ரூபாய் திரட்டியதாகவும், மீதமுள்ள 28 லட்சம் ரூபாவை உடனடியாக தருமாறு அச்சுறுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான முறைப்பாட்டை அடுத்து உனவட்டுனை சுற்றுலா பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பில் 25 மற்றும் 26 வயதுடைய 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் அல்டோ கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.
குறித்த சந்தேகநபர்கள் காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன எனத் தெரிவிக்கப்படுகிறது.








