அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிரான வழக்கு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த விவகாரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு உத்தரவிட்ட நீதவான் பஸன் அமரசேன, வழக்கினை செப்டம்பர் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
இதேநேரம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள், தங்களது விசாரணைகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டதாகவும், அவை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, சட்டமா அதிபரின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க மேலதிக கால அவகாசத்தை அரச தரப்பு சட்டத்தரணி கோரியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், சர்ச்சைக்குரிய நிதியில் சுமார் பாதிக்கும் மேலான தொகை வாகனங்களுக்காகச் செலவிடப்பட்டதாக விசாரணையில் கூறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
எனினும், அந்த வாகனங்கள் பிரித்தானிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டவை என குறிப்பிட்ட சட்டத்தரணிகள், அது தொடர்பான ஆவணம் ஒன்றையும் அரச தரப்பு சட்டத்தரணியிடம் ஒப்படைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரினர்.
2023-ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதியின் மனைவியின் பட்டமளிப்பு விழாவிற்காக பிரித்தானியாவிற்கு மேற்கொண்ட தனிப்பட்ட பயணத்திற்காக, மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக ரணில் விக்கிரமசிங்க மற்றும் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








