இலங்கையில் வாகனங்களுக்கு 15 சதவீத வரி விதிக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளதைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள அனைத்து வாகனங்களின் விலைகளும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கக்கூடும் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத் தலைவர் பிரசாத் மானகே எச்சரித்துள்ளார்.
அவரின் கூற்றுப்படி, இந்த வரி மாற்றம் 2026 ஆம் ஆண்டு பாதீட்டுக்குப் பிறகு நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இறக்குமதியாளர்கள் மொத்த விலையில் 15 சதவீத தள்ளுபடி பெற்று வருகின்றனர், அதாவது வாகனத்தின் மதிப்பில் 85 சதவீதம் மட்டுமே வரிக்கு உட்பட்டது.
ஆனால் புதிய திட்டத்தின் கீழ், இந்த 15 சதவீத தள்ளுபடி நீக்கப்பட வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதனால் ஜப்பானில் தயாரிக்கப்பட்ட குறைந்த விலை “அல்டோ” வாகனங்களிலிருந்து உயர்நிலை “டொயோட்டா லேண்ட் குரூசர்” போன்ற வாகனங்கள் வரை அனைத்திற்கும் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
முன்மொழியப்பட்ட வரி அமல்படுத்தப்பட்டால், ஒரு சுஸுகி வேகன் ஆர் வாகனத்தின் விலை சுமார் ரூ. 400,000 உயரக்கூடும் எனவும், ஒரு டொயோட்டா லேண்ட் குரூசர் விலை குறைந்தது ரூ. 3 மில்லியன் வரை அதிகரிக்கலாம் எனவும் மானகே தெரிவித்தார்.
அதேநேரத்தில், 2015 முதல் இறக்குமதியாளர்கள் பெற்று வரும் இந்த தள்ளுபடியை ரத்து செய்ய வேண்டாம் என்று அவர் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.








