வெளிநாடுகளில் பதுங்கியுள்ள 73 பாதாள உலக நபர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை இன்டர்போல் சிவப்பு அறிவிப்பின் கீழ் மீண்டும் இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
நேற்று(15) சனிக்கிழமை கண்டியில் ஊடகங்களிடம் பேசிய அவர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மேலும் கிட்டத்தட்ட 100 நபர்கள் தொடர்பாகவும் விசாரணைகள் நடைபெறுவதாக கூறினார்.
“இன்னும் சுமார் 73 சிவப்பு அறிவிப்பு சந்தேகநபர்களை கொண்டு வர வேண்டியுள்ளது. அது தவிர கிட்டத்தட்ட 100 நபர்கள் இருப்பதாகவும் நம்புகிறோம்” என்று வீரசூரிய கூறினார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருட்களை ஒடுக்குவதில் இலங்கைக்கு வலுவான சர்வதேச ஒத்துழைப்பு கிடைத்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் முன்னேற்றம் வெளிநாடுகள் மற்றும் தூதரகங்களால் சாதகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த நடவடிக்கைகளை நிறுத்துமாறு கோரி வெளிநாடுகளில் இருந்து எந்த அழுத்தமோ அச்சுறுத்தலோ இல்லை என்றும், மாறாக நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு கோரிக்கைகள் வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
எனினும், குற்ற மற்றும் போதைப்பொருள் வலையமைப்புகளுக்கு நிதியளித்தவர்கள், முதலீடு செய்தவர்கள் அல்லது உதவியவர்கள் தற்போது இந்த நடவடிக்கைகள் குறித்து பெரும் அச்சத்தில் உள்ளனர் என்றும் வீரசூரிய குறிப்பிட்டார்.
இதேவேளை சில அரசியல்வாதிகள் தன்னைப் பற்றி செய்த கருத்துகளுக்கு பதிலளித்த பொலிஸ் மா அதிபர், தான் எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்சவில்லைஎன்றும் எந்த சவாலையும் எதிர்கொள்ள தயார் என்றும் கூறினார்.
தான் சமூக அநீதி எதுவும் செய்யவில்லை, சமூகத்திற்கு எந்த தீங்கும் ஏற்படுத்தவில்லை என்பதால் விசேட பாதுகாப்பு இல்லாமல் கூட நாட்டில் எங்கும் பயணிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.








