ஹமாஸின் 2023 ஒக்டோபர் 7 தாக்குதலின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை இஸ்ரேல் இன்று புதன்கிழமை அனுசரிக்கிறது, அந்த நாட்டின் வரலாற்றில் மிக மோசமான நாளாக கருதப்படும் இந்த சம்பவம் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னதாக முக்கிய இடத்தைப் பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் கடந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதிலிருந்து நடைபெறும் முதல் நினைவு நிகழ்வுகளாகவும் இந்த நினைவு நிகழ்வுகள் அமையும் என கூறப்படுகிறது.
இஸ்லாமிய இயக்கத்தின் தலைமையிலான போராளிகளால் காசாவிலிருந்து நடத்தப்பட்ட தாக்குதலின் போது கொல்லப்பட்ட பலருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாள் முழுவதும் நினைவு நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.
பாலஸ்தீன போராளிகள் எல்லையை மீறி, துப்பாக்கிச் சூடு, ரொக்கெட்டுகள் மற்றும் கையெறி குண்டுகளுடன் தெற்கு இஸ்ரேலைத் தாக்கினர், அதிகாரப்பூர்வ இஸ்ரேலிய புள்ளிவிவரங்களின் அடிப்படையில் (AFP) ஏ.எப்.பி ஊடகத்தினால் 1,221 பேர் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராளிகள் 251 பணயக்கைதிகளை காசாவுக்கு இழுத்துச் சென்றனர், அவர்களில் 44 பேர் ஏற்கனவே உயிரிழந்தனர் என கூறப்படுகிறது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஹமாஸ் தாக்குதல் தொடங்கிய சரியான நேரமான காலை 06:29 மணிக்கு (0329 GMT), காசா எல்லைக்கு அருகிலுள்ள கிபுட்ஸ் கஃபர் அசாவில் அஞ்சலி நிகழ்வு நடைபெறவுள்ளது, அங்கு போராளிகள் தங்கள் தாக்குதலின் போது 64 குடியிருப்பாளர்களைக் கொன்று 18 பேரைக் கடத்திச் சென்றனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.
தெற்கு இஸ்ரேலில் உள்ள நோவா இசை விழா நடந்த இடத்திலும் மற்றொரு நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த இடத்தில் போராளிகள் 37 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்று டஜன் கணக்கான பணயக்கைதிகளைக் கைப்பற்றினர் என தெரிவிக்கப்படுகிறது.
இழப்புற்ற குடும்பங்களும் புதன்கிழமை மாலை டெல் அவிவ் பூங்காவில் ஒன்றுகூடல் ஒன்றை ஏற்பாடு செய்து வருகின்றனர் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.








