‘‘பயங்கரவாத தடைச் சட்டம், நிகழ்நிலை காப்புச் சட்டம் என்பவற்றை விரைவாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நம்புகிறேன். அதற்கான பணிகளை ஆரம்பித்துவிட்டோம். அதேபோன்று, பாராளுமன்றத்தில் சட்டமூலங்களாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 வரையான சட்டங்கள் தொடர்பில் மறுபரிசீலனை செய்யவும் திட்டமிட்டுள்ளோம்’’ என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற மாநாடொன்றின்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

‘‘சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முறையின் மீது நம்பிக்கையை கட்டியெழுப்புவது என்பது அரசாங்கம் என்ற அடிப்படையில் எங்களுக்கு சவாலை ஏற்படுத்தியுள்ளது. சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் மீது மீண்டும் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும்.

அது அவ்வளவு இலகுவான விடயமல்ல. இந்த நிறுவனங்கள் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை தற்போது இல்லாமல் போயுள்ளது. அதில் மக்களின் தவறு எதுவும் இல்லை. எங்களால் முன்னெடுக்கவுள்ள வேலைத்திட்டங்களினூடாக இந்த நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை கட்டியெழுப்பவே நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்கள் மேலும் விரிவாக்கப்பட வேண்டும். அதேபோன்று வெளிப்படைத்தன்மையும் இருக்கவேண்டும். நீதிக்காக மேலும் பல விடயங்களை தவிர்க்க வேண்டிய நிலைமையிலேயே நாங்கள் இருக்கிறோம். சட்டங்கள் மறுசீரமைப்பு செய்யப்படவேண்டும். அதேபோன்று அவற்றை முறையாக பயன்படுத்த வேண்டும். இருந்தபோதும் மக்கள் மத்தியில் எண்ண அடிப்படையிலான மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்.

அந்த மாற்றத்தினூடாக அநேகமாக விடயங்களை பார்க்கும் தன்மையில் மாற்றம் ஏற்பட வேண்டும். பயங்கரவாத தடைச் சட்டம், நிகழ்நிலை காப்புச் சட்டம் என்பவற்றை விரைவாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நம்புகிறேன்.

ஆரம்பத்திலிருந்து பணிகளை முன்னெடுக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை. தற்போது வரையில் அநேகமான பணிகளை நிறைவு செய்துவிட்டோம். அதேபோன்று, பாராளுமன்றத்தில் சட்டமூலங்களாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 வரையான சட்டங்கள் தொடர்பில் மறுபரிசீலனை செய்வோம்.

எங்களுக்கும் மக்களின் பெரும்பான்மை விருப்பம் கிடைத்துள்ளது. அதற்காக நாங்கள் தன்னிச்சையான தீர்மானம் எடுப்போம் என்று கூறவில்லை. நாங்கள் எந்தத் தீர்மானம் எடுத்தாலும் சகலருடனும் கலந்துரையாடியதன் பின்னரே தீர்மானம் எடுப்போம்’’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here