ஐந்து லட்சத்திற்கும் அதிக பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் பேரில் நேற்று (16) கரையோர பொலிஸ் நிலையத்தின் விசேட விசாரணை பிரிவுடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன்போது ரூ. 537,200 பெறுமதியான 63 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
வெல்லம்பிட்டி, கொட்டுவில, களனி நதீகம பிரதேசத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் 36 வயதுடையவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் நாட்டிலுள்ள போதைப்பொருள் வலையமைப்புடன் சந்தேகநபரும் தொடர்பு கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் போதைப்பொருள் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளை கரையோர பொலிஸ் நிலையம் மேற்கொண்டு வருகிறது.








