“தற்போதைய எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவு குப்பைமேட்டை போன்றது. கடந்த காலங்களில் ஒருவரை ஒருவர் திருடர்கள், ஊழல்வாதிகள் என குற்றம்சாட்டியவர்கள் இப்போது அதிகாரத்திற்காக ஒரே மேடையில் சேர்ந்துள்ளனர். ஆனால் மக்கள் அவர்களிடம் திரும்பப் போவதில்லை.” என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் செப்டம்பர் 20ஆம் திகதி நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
“நாட்டு மக்கள் தற்போது தேசிய மக்கள் சக்தி பக்கம் இருக்கிறார்கள்.ஊழல்வாதிகளையும், நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியவர்களையும் மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர மக்கள் தயாரில்லை.எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது மக்களின் பிரச்சனைகளை தீர்க்க அல்ல; தங்கள் அரசியல் பாதுகாப்பிற்காகத்தான்.பழைய அரசியல் முறைகள் இனி வெற்றியடையாது.” என அவர் குறிப்பிட்டார்.








