2025 ஆசியக் கிண்ணத்தின் சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் பாகிஸ்தான் அணி, பங்களாதேஷை 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்த வெற்றியுடன், முதல் முறையாக ஆசியக் கிண்ண இறுதியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.
நேற்று இரவு துபாயில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற பங்களாதேஷ் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது.
முதல் 10 ஓவர்களில் பாகிஸ்தான் அணியை கடுமையாகக் கட்டுப்படுத்திய பங்களாதேஷ், ஒரு கட்டத்தில் அவர்களை 5 விக்கெட்டுக்கு 49 ஓட்டங்களில் தடுத்து வைத்தது.
எனினும், மொஹமட் ஹாரிஸ் (31), மொஹமட் நவாஸ் (25), ஷஹீன் அப்ரிடி (19) ஆகியோரின் நிலையான பங்களிப்பினால் பாகிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 135 ஓட்டங்கள் சேர்த்தது.
பதிலுக்கு களமிறங்கிய பங்களாதேஷ், ஆரம்பத்திலிருந்தே பாகிஸ்தானின் அழுத்தமான பந்துவீச்சுக்கு சிக்கியது.
ஷாஹீன் அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவூஃப் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாக பந்து வீசியனர். பங்களாதேஷ் 9 விக்கெட்டுகளுக்கு 124 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியைச் சந்தித்தது.
பங்களாதேஷுக்காக ஷமிம் ஹொசைன் 30 ஓட்டங்களை எடுத்தார். ஆட்டத்தில் துடுப்பாட்டத்திலும் பந்து வீச்சிலும் சிறந்து விளங்கிய ஷஹீன் அப்ரிடி, ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கிடையில், இன்னும் ஒரு சூப்பர் 4 ஆட்டத்தில், இந்தியா இன்று இலங்கையை எதிர்கொள்வதற்காக துபாயில் களமிறங்குகிறது, குறிப்பிடத்தக்கது.








