கல்வித் துறையை டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பான கொள்கைத் திட்ட வரைபை, 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமைச்சரவையில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி மறுசீரமைப்புக்கான டிஜிட்டல் செயலணியின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரான கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமைச்சு சார் ஆலோசனைக் குழுவின் கல்வி மறுசீரமைப்புக்கான உபகுழு கூட்டத்தின் போது இந்த தகவல் வெளியாகியது.

இந்த சந்திப்பின் போது, கல்வி மறுசீரமைப்புக்கான டிஜிட்டல் செயலணியினால் தயாரிக்கப்பட்ட பணித்திட்டம் முன்வைக்கப்பட்டது.

அதில், ஆறு பிரிவுகளின் கீழ் கல்வி துறையில் மேற்கொள்ளவுள்ள முக்கிய மாற்றங்களுக்கிடையில், டிஜிட்டல் மயமாக்கல் ஒரு முக்கிய அம்சமாக விளக்கப்பட்டது.

குறிப்பாக, ஆசிரியர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் தீர்வாகவும், மாணவர்களின் வளர்ச்சி நிலையை கண்காணிக்கும் வசதியாகவும், சில பேரிடர் சூழ்நிலைகளில் கல்வியைத் தொடர வழிவகுக்கும் முயற்சியாகவும், இந்த திட்டம் அமையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இணைய வசதிகள், டிஜிட்டல் போர்‌டுகள் மற்றும் கணினி உபகரணங்கள் இல்லாத பாடசாலைகளுக்கு, அவை வழங்கப்படும் எனவும், 2025 ஆண்டு இறுதிக்குள் இந்த உபகரணங்கள் அனைத்தும் பாடசாலைகளுக்கு எடுத்துச் செல்லப்படும் எனவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டில் சில பாடசாலைகளுக்கு இன்னும் மின்சாரம் இல்லை, பல பாடசாலைகளில் கணினிகள், டப் கருவிகள் மற்றும் டிஜிட்டல் ஸ்மார்ட் போர்டுகள் இல்லாமல் உள்ளன என்பதை இந்த சந்திப்பின் போது அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், எதிர்காலத்தை உருவாக்கும் முக்கியமான மாற்றமாக இந்த திட்டம் இருக்கும் என்பதையும், அதற்கான முழுமையான ஒத்துழைப்பை கல்வித் துறையில் உள்ள அனைவரும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், கல்வி மறுசீரமைப்புக்கான சிந்தனைகள் மற்றும் பரிந்துரைகளை தொடர்ந்து முன்வைக்குமாறு டிஜிட்டல் செயலணியினரை அவர் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here