ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயமாகச் சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இன்று (செப்டம்பர் 29) ஜப்பான் பிரதமர் அலுவலகத்தில் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவை சந்திக்கவுள்ளார்.
இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரம், முதலீடு, அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகள் தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் ஜனாதிபதியுடன் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாதுறை அமைச்சர் விஜித ஹேரத், டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, மற்றும் வெளியுறவு அமைச்சின் உயர் மட்ட அதிகாரிகள் குழுவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான பாரம்பரிய நட்புறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடனும் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.








