ஈரானுடனான போர் முடிவுக்கு வரும் நிலையில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலை குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

”ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது, தற்போது ஈரான் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தினால் கூட அவர்கள் நாட்டை மீண்டும் கட்டி எழுப்புவதற்கு 20 வருடங்கள் ஆகும்”.

ஈரானின் அணுசக்தி திறன்களை சிதைப்பதற்கு போர் நடவடிக்கை மிகவும் அவசியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்து அமெரிக்காவும் ஈரானும் பாகிஸ்தானில் பேச்சுவார்த்தை நடத்தின.

இதன் போது ஈரான் தனது அனைத்து அணுசக்திப் பணிகளையும் 20 ஆண்டுகளுக்கு நிறுத்த வேண்டும் என அமெரிக்கா தன் நிலைப்பாட்டை தெரிவித்தது.

இந்நிலையில் அணுசக்தி பணிகளை 3 முதல் 5 ஆண்டுகளுக்கு மட்டும் இடை நிறுத்த விரும்புவதாக ஈரான் தெரிவித்தது.

அதேநேரம் ஈரானிலிருந்து செறிவூட்டப்பட்ட அனைத்து அணுசக்திப் பொருட்களையும் வெளியேற்ற வேண்டும் என அமெரிக்கா தெரிவித்த நிலையில் தனக்கு எதிரான சர்வதேசத் தடைகள் முதலில் நீக்கப்பட வேண்டும் என ஈரான் கோரிக்கை முன் வைத்தது.

அத்துடன் லெபனானில் ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஹிஸ்புல்லாவிற்கு ஈரான் ஆதரவளிப்பதை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா கோரியது.

ஹிஸ்புல்லா மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் எனவும் இதன்போதே அமைதி பேச்சுவார்த்தை முன்னெடுக்க முடியும் எனவும் ஈரான் கோரிக்கை முன்வைத்தது.

இவ்வாறு பேச்சுவார்த்தையில் இணக்கம் எட்டப்படாத நிலையில், ஈரான் கடல் பகுதியை முற்றுகையிடும் வகையில் அமெரிக்கா மத்திய கிழக்கு கடல் பகுதியில் போர் கப்பல்களை நிறுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும் என எதிர்பார்ப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here