15 வயது சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அனுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரரைக் கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காவல்துறையால் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், அனுராதபுர பிரதம நீதிபதி குறித்த தேரருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதித்ததோடு, அவர் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க குடிவரவு அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் ஹேமரத்ன தேரர் மற்றும் சிறுமியின் தாயாரை சந்தேக நபர்களாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
குற்றத்திற்கு உடந்தையாக இருந்த காரணத்திற்காகவும், பணத்திற்காக குழந்தையை விற்றதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில் 15 வயது சிறுமியின் தாயார் இன்று கைது செய்யப்பட்டார்.
அவர் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அவர் மே 15 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், சந்தேக நபரைக் கைது செய்வதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறி தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை (NCPA) நீதிமன்றத்தை நாடியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2026 மார்ச் 06 ஆம் திகதி அன்று நிட்டம்புவ காவல்துறையில் ஒரு சிறுமி கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாகப் முறைப்பாடு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து விசாரணை தொடங்கியது.
முதற்கட்டமாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார், இதேவேளை பாதிக்கப்பட்ட சிறுமி ராகமையில் உள்ள ஒரு சிறுவர் காப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளார் என அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








