பாதுகாப்புக் கவசங்கள் இன்றி இளம் பெண்கள் மூவர் மோட்டார் சைக்கிளில் அபாயகரமாக பயணித்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து,புத்தல பொலிசார் குறித்த பெண்களைக் கைது செய்துள்ளனர்.
இணையத்தில் குறித்த காணொளி பரவியதைத் தொடர்ந்து, அதிகாரிகள் விசாரணை நடத்தி, அந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட மோட்டார் சைக்கிள் உரிமையாளர்,சாரதி மற்றும் இரண்டு பயணிகளை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் கொலம்பகே எரா, ஹிடிகிவுல மற்றும் உனவட்டுன ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணையில், மோட்டார் சைக்கிளை செலுத்திய 23 வயதான பெண்ணிடம் சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் செல்லுபடியாகும் சாரதி உரிமம் இல்லை என்பது தெரியவந்தது.
செல்லுபடியாகும் உரிமம் இன்றி மோட்டார் சைக்கிள் இயக்குதல், மோட்டார் சைக்கிளில் ஒன்றுக்கு மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்லுதல், பாதுகாப்புக் கவசங்கள் அணியாது செலுத்துதல், மற்றும் பொறுப்பற்ற வகையிலும், கவனக்குறைவாகவும் செலுத்துதல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
உரிமம் இல்லாத ஒருவரை வாகனத்தை செலுத்த அனுமதித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், மோட்டார் சைக்கிள் உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
சாரதி மற்றும் உரிமையாளர் இருவரும் இன்று வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.








