நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக காய்கறி விநியோகம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதால், எதிர்வரும் நாட்களில் காய்கறி விலைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில், தற்போது நிலவும் மழை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று எச்சரித்துள்ளது.
மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால், உள்ளூர் சந்தைகளில் மேலும் விநியோகப் பற்றாக்குறை ஏற்பட்டு மேலும் காய்கறிகள் விலை அதிகரிக்க கூடும் என வர்த்தகர்கள் மத்தியில் கவலை எழுந்துள்ளது.
மென்னிங் சந்தை வர்த்தகர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் எஸ். எம். உபசேன, காய்கறிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என தெரிவித்துள்ளதோடு. “தற்போது காய்கறி விநியோகம் சாதாரணமாக காணப்படுகின்றது எனவும், வரும் நாட்களில் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் காய்கறி விலைகள் அதிகரிக்கலாம்,” என அவர் பிரபல ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், சீரற்ற காலநிலை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக மக்கள் சந்தைக்கு செல்வதை குறைத்து கொண்டுள்ள நிலையில் காய்கறி விற்பனை ஓரளவு குறைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சீரற்ற காலநிலை நேற்றும் தொடர்ந்ததுடன், புத்தளம், கொழும்பு, களுத்துறை, மட்டக்களப்பு, மொனராகலை, காலி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தளத்தில் 256 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. கெஸ்பேவ மற்றும் நவகத்தேகமவில் 77 மில்லிமீற்றர் மழையும், காலியில் 72 மில்லிமீற்றர் மழையும் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








