மீகொட சந்தி அருகே அமைக்கப்பட்ட வெசாக் தானசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வரிசையில் காத்திருந்த மக்கள் கூட்டத்தின் மீது வாடகைக் கார் மோதியதில் ஆறு பேர் உயிரிழந்ததோடு ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

மீகொட பொலிஸ் பிரிவில் உள்ள ஹை லெவல் வீதியில் , அவிஸ்ஸாவெல்லயிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற வாடகைக் கார் ஒன்று தானசாலையில் வரிசையில் நின்றிருந்த மக்கள் கூட்டத்தின் மீது மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து காயமடைந்த மொத்தம் 13 பேர் ஹோமகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று ஆண்களும் மூன்று பெண்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸ் அறிக்கை தெரிவிக்கிறது.

உயிரிழந்த 35 முதல் 38 வயதுக்குட்பட்ட ஆண்கள், ஹங்வெல்ல மற்றும் அவிசவெல்ல பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் உயிரிழந்த பெண்கள், பிலியந்தல பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீகொட சந்தியில் பணியில் இருந்த பொலிஸ் அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் சாரதியை கைது செய்ததோடு வாடகைக் காரையும் மீட்டுள்ளனர்.

பிலியந்தலயைச் சேர்ந்த 42 வயதான சந்தேக நபர், விபத்து நேர்ந்த சந்தர்ப்பத்தில் மதுபோதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த ஏழு பேர் ஹோமகம மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், மீகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here