எல் நினோ நிலை தற்போது தீவிரமடைந்துள்ளதாகவும், எதிர்பார்த்ததை விட முன்னதாகவே, அதாவது நவம்பர் மாதத்தில் இலங்கையில் அதன் உச்ச நிலையை அடையக்கூடும் என்றும் சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபென்டி எச்சரித்துள்ளார்.
இந்த நிகழ்வின் தாக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர், ஜூலை, ஓகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இலங்கை கடுமையான வறண்ட வானிலையை எதிர்கொள்ள நேரிடும் என கூறியுள்ளார்.
அத்துடன் அதைத் தொடர்ந்து வரும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் கடும் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்தார்.
இது இலங்கைக்கு மட்டுமன்றி, உலகளாவிய சுற்றாடல் சவால் என்று கூறிய அவர், இந்த நிலையை எதிர்கொள்ள அரச நிறுவனங்கள் ஏற்கனவே வலுவான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறினார்.
கடுமையான வறட்சி ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று வலியுறுத்திய அமைச்சர், மின்சாரம் மற்றும் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மக்களை கேட்டுக்கொண்டார்.
எல் நினோ தாக்கத்தால் வேலை இழப்புகள், பொருளாதார பின்னடைவுகள், பொது சுகாதாரம் பாதிப்படையும் அபாயம் கூட உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன, எல் நினோ நிலை மிகவும் வலுவானதாக மாறக்கூடும் என்றார்.
முன்னர் உலகளவில் இது பலவீனமாக இருந்தாலும், தற்போது மிதமான நிலையை அடைந்து தீவிரமடைந்து வருவதாக அவர் விளக்கினார்.
எல் நினோ பொதுவாக 10-12 மாதங்கள் நீடிக்கும் என்றும், எதிர்வரும் நாட்களில் வறட்சி மற்றும் கடும் மழை இரண்டையும் ஏற்படுத்த கூடும் என்றும் அவர் கூறினார்.
மேற்கு, சபரகமுவ, கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை போன்ற மாவட்டங்களில் மழை அதிகரிக்கும் என்றும், ஏனைய பிரதேசங்களில் வறண்ட நிலையும் வெப்பநிலை உயர்வும் இருக்கும் என்றும் தெரிவித்தார்.
செப்டம்பர் இறுதியில் சிறிது மழை எதிர்பார்க்கப்படுவதாகவும், அக்டோபர் முதல் கனமழை பெய்ய வாய்புள்ளதாகவும் மேலும் கூறினார்.
ஆண்டின் இறுதி மாதங்களில் வெள்ள நிலைமைகள் ஏற்படலாம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.








