மொனராகலை கல்வி வலயத்தில் உள்ள படல்கும்புர, எத்பட்டிய பாடசாலை, இலங்கையில் மாணவர்கள் இல்லாத ஒரே பாடசாலையாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர், மற்றும் மாணவர்கள் இல்லாத இந்த பாடசாலையில், ஆசிரியர் ஒருவரும் ஒரு கல்விசாரா பணியாளரும் பணியாற்றி வருகின்றனர்.

1948-ல் 70 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இந்த பாடசாலை 200 மாணவர்கள் மற்றும் 16 ஆசிரியர்களைக் கொண்ட பணியாளர் குழுவாக வளர்ச்சி அடைந்திருந்ததாக பாடசாலையின் ஓய்வுபெற்ற அதிபர் மல்லிகா ரத்நாயக்க ஊடகம் ஒன்றிடம் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைக்கு அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள், ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை இந்தப் பாடசாலையில் பயின்று, அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகித்துள்ளனர் என குறித்த அதிபர் தெரிவித்துள்ளார்.

தான், 2018-ல் அதிபராக நியமிக்கப்பட்டு, 2023-ல் மற்றொரு பாடசாலைக்கு மாற்றப்பட்டு 2024-ல் மீண்டும் அதிபராக திரும்பியபோது, ​​பாடசாலையில் மாணவர் எண்ணிக்கை மூன்றாகக் காணப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.

2026 ஆண்டு ஆரம்பத்தில், பாடசாலையில் ஒரே ஒரு மாணவர் மாத்திரமே கல்வி பயின்ற நிலையில், ஜனவரி 8-ஆம் திகதி தான் ஓய்வு பெற்றபோது குறித்த மாணவரும் பாடசாலையை விட்டு வெளியேறினார்.

தற்போது ஆசிரியர் ஒருவர் உட்பட இரண்டு பணியாளர்கள் மாத்திரமே காணப்படுகின்றனர்.

அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய இந்தப் பாடசாலை , ஆசிரியர்கள் பற்றாக்குறையால் இவ்வாறு காணப்படுவதாகவும், முக்கியப் பாடங்களுக்கு ஆசிரியர்கள் கிடைத்தால் பாடசாலையை மேம்படுத்த முடியும் என்றும் அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பாடசாலையை மூடுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், வரும் ஆண்டுகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதாகவும் படல்கும்புர பிரதேச பணிப்பாளர் அஜித் லியனபதிரன தெரிவித்துள்ளார். மேலும், ஊவா மாகாண கல்வி அமைச்சிடம் இந்த விடயத்தை எடுத்துச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here