ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு, சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஓர் அறிக்கை ஊடாக அறிவித்துள்ளது.
ஓமான் கடற்கரைக்கு அப்பால் அமெரிக்க இராணுவத்தின் அப்பாச்சி ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதற்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல்கள் தொடங்கியதாகவும் மேலும் இது ஒரு தற்காப்புத் தாக்குதல் என்றும் அறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்தத் தாக்குதல்கள் ஈரானுக்கு ஓர் எச்சரிக்கையாக நடத்தப்பட்டதாகவும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தற்போதைய பேச்சுவார்த்தைகளுக்கு இது தடையாக அமையாது என்றும் வெளிநாட்டு ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த ஓர் அமெரிக்க அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பகட்டத் தாக்குதல்கள், ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றியுள்ள வான் பாதுகாப்பு மற்றும் ரேடார் அமைப்புகளைக் குறிவைத்ததாகவும் கூறப்படுகிறது.
திங்களன்று ஈரானின் ஷாஹெட் ஆளில்லா விமானம் மூலம் குறித்த ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் தெரிவிக்கப்படுகிறது. இது தற்செயலாக நடந்த தாக்குதலா அல்லது திட்டமிடப்பட்டதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதேவேளை ஹெலிகொப்டரில் இருந்த இரண்டு விமானிகளுக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், அவர்கள் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் மூலம் மீட்கப்பட்டனர் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும் தாக்குதல்கள் தொடர்ந்தும் நடத்தப்பட வாய்ப்புள்ளது என சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.








