உலக வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் கடுமையான வானிலை மாற்றங்களுக்கு காரணமான எல் நினோ நிலை தற்போது தொடங்கியுள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் திணைக்களத்தின் முன்னறிவிப்பு பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவித்ததாவது,
குறித்த எல்நினோ நிலை தென்மேற்கு பிராந்தியத்தில் மழைப்பொழிவு குறைவதற்கும் காரணமாகியுள்ளது.
மேலும், தற்போதைய மழைக்கால வானிலை எதிர்வரும் ஜூலை மாதம் முதல் குறையும் என்றும், எல் நினோ நிலை குறித்து திணைக்களம் வெளியிடும் எதிர்கால அறிவிப்புகள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.
இந்த நிலைமையை எதிர்கொள்ள நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பில் மேலும் விளக்கமளித்த அவர், “எல் நினோ நிலை தென்மேற்கு பிராந்தியத்தில் மழைப்பொழிவு குறைவதற்கு பங்களிக்கிறது. எனினும், இந்த எல் நினோ நிலையுடன், ஜூலை, ஓகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மழைப்பொழிவு குறையும் என்று எதிர்பார்க்கிறோம். எல் நினோ நிலையின் வளர்ச்சி ஏற்கனவே தொடங்கிவிட்டது. எனவே, எதிர்கால வானிலை அறிக்கைகள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு நான் குறிப்பாக நினைவூட்டுகிறேன். மழைப்பொழிவு குறைவதால் எதிர்கால வானிலை நிலைமைகளில் வெப்பநிலை அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதால், ஏற்கனவே உள்ள நீர் வளங்களை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.








