இலங்கையின் குற்றக் கும்பல்கள், இராணுவத் தரத்திலான ஆயுதங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் தடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் போலி ஆயுதங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக மத்திய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவின் (CCIB) பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன கொடித்துவக்கு, குற்றக் கும்பல்களிடம் ஆயுதங்களுக்கு பற்றாக்குறை நிலவுவதால், அவர்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மற்றும் போலியான துப்பாக்கிகளை நோக்கிச் செல்வதை சட்ட அமுலாக்க பிரிவினர் அவதானித்துள்ளதாகத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட ‘மினி-உஸி’ (Mini-Uzi) ரக இயந்திரத் துப்பாக்கியைப் போன்று நாட்டில் வடிவமைக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றை புலனாய்வு பிரிவு அண்மையில் கைப்பற்றியது.

இந்த வகை ஆயுதங்கள், பொதுவாக இராணுவ கமாண்டோக்கள், விசேடப் படைகள், விசேட அதிரடிப்படை மற்றும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு போன்ற விசேடப் பாதுகாப்புப் பிரிவினரால் மாத்திரமே பயன்படுத்தப்படுபவை ஆகும்.

டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டு தற்போது CCIBயால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ‘மகாவத்தை சமர’ என்ற பாதாள உலகக் குழுத் தலைவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த ஆயுதம் கைப்பற்றப்பட்டது.

இதேநேரம் கொழும்பு வடக்கு விசேட குற்றப்பிரிவு நடத்திய மற்றொரு நடவடிக்கையில், ‘கல்கடாஸ்’ (Galkatas) என்று அழைக்கப்படும் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட 19 ஒற்றை-சுடு வகை துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

“சந்தையில் ஆயுதங்களின் வரவு குறைந்துள்ளதால், குற்றக் கும்பல்கள் இவ்வாறான கைவினை ஆயுதங்களை நோக்கித் திரும்புவதை இது காட்டுகிறது” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குற்றக் கும்பல்கள் குறைந்த எண்ணிக்கையிலான ஆயுதங்களை வெவ்வேறு பிரதேசங்களுக்கு இடையில் பகிர்ந்து பயன்படுத்துவதையும் பொலிஸ் விசாரணைகள் வெளிப்படுத்தியுள்ளன.

அரசாங்க பகுப்பாய்வு திணைக்களம் நடத்திய தடயவியல் பரிசோதனைகளின்படி, கொழும்பில் நடந்த கொலை ஒன்றில் பயன்படுத்தப்பட்ட டி-56 (T-56) ரக துப்பாக்கி, அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக மாத்தறையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திலும் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறான குறுகிய காலத்தில் ஒரு ஆயுதம் இரண்டு மாகாணங்களுக்கு இடையில் கொண்டு செல்லப்படுவது, குற்றக் கும்பல்களிடம் ஆயுதங்களுக்கு நிலவும் தட்டுப்பாட்டையும், சட்டவிரோத ஆயுதங்களுக்கு எதிராக பொலிஸார் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் தாக்கத்தையும் காட்டுகிறது என்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் கொடித்துவக்கு மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here