இலங்கையின் முதலாவது பிரத்தியேக படகு இறங்குத்துறை நேற்று (Boat Launching Ramp) களுத்துறை மாவட்டத்தில் உள்ள பேருவளை மீன்பிடித்துறைமுகத்தில் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
நாட்டின் படகு ஏற்றுமதித்துறையின் வளர்ச்சியில் இது ஒரு முக்கிய படியாகும்.
தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சினால் 76 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த தளம், இலங்கையின் எதிர்கால பொருளாதார அபிவிருத்தியில் முக்கிய ஏற்றுமதித்துறையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இறங்குத்துறையின் திறப்பு விழாவில் தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சின் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாராச்சி மற்றும் அமைச்சின் செயலாளர் திலக ஜயசுந்தர ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறித்த நவீன தொழில்நுட்பம் மற்றும் வசதிகளுடன் கூடிய புதிய தளம், தொழில் முனைவோர்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படும் படகுகளை மிகவும் பாதுகாப்பாகவும் திறமையாகவும் இறக்க உதவும் என்று அமைச்சர் ஹந்துன்நெத்தி இதன்போது தெரிவித்தார்.
மேலும் இது, உற்பத்திச் செலவைக் குறைத்து, சர்வதேச சந்தையில் இலங்கையின் படகுத்துறை வெற்றிகரமாக போட்டியிட வழிவகுக்கும் எனவும் ava தெரிவித்துள்ளார்.








