அவுஸ்திரேலிய வரலாற்றிலேயே மிகப்பெரிய கொக்கைன் பறிமுதல் நடவடிக்கையில், காவல்துறை 2.7 டொன் போதைப்பொருளைப் பறிமுதல் செய்துள்ளதோடு எட்டு பேரைக் கைது செய்துள்ளது.

மேற்கு சிட்னியில் கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட சோதனை தொடர்பான விபரங்களை அவுஸ்திரேலிய காவல்துறை இன்று அறிவித்தது. குறித்த அறிவிப்பிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சோதனையின் விளைவாக, ஒரு ரகசிய பதுங்குக்குழியில் உள்ள கொள்கலன்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

குறித்த கொக்கைன் போதைப்பொருட்கள், போலி கொள்கலன் தளங்களால் மறைக்கப்பட்டிருந்த நிலத்தடி பதுங்குக்குழியில் புதைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் தொட்டிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட கொக்கைனின் சந்தை மதிப்பு சுமார் 816 மில்லியன் டொலர்கள் என்றும், இந்த மாபெரும் போதைப்பொருள் சொலமன் தீவுகளில் இருந்து வரவில்லை என நம்புவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

லண்டன்டெர்ரி எனும் பகுதியில் சோதனை நடத்தியபோது, ​​ஒரு சரக்குக் கொள்கலனுக்கு அருகில் தோண்டப்பட்டிருந்த மண் குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்தியமை, “மறைத்து வைக்கும் நோக்கத்திற்காகவே தெளிவாக வடிவமைக்கப்பட்ட மறைவிடத்தைக்” கண்டுபிடிக்க வழிவகுத்தது என்று அவுஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறையின் தளபதி ஸ்டீபன் ஜே கூறியுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 8 பேர் இது வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்தக் குற்றத்திற்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அந்த நாட்டின் வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள மிட்ஜ் பொயின்ட் என்ற இடத்தில் படகு இறங்குதளத்திற்கு அருகே கடலில் 40 கிலோ கொக்கைன் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மே மாதம் தொடங்கப்பட்ட ‘ஆபரேஷன் மின்ஜியாங்’ நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தக் கொக்கைன் தொகை மீட்கப்பட்டுள்ளன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here